இந்த கட்டுரை எழுதுவதன் நோக்கம் எனக்கு வழிகாட்டியவர்களை, ஊக்கப்படுத்தியவர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்பது மற்றும் என் வாழ்வின் ஒரு பகுதியை பதிவு செய்வது. ஆவணப்படுத்துதல் என்ற பெருஞ்சொல்லை பனிவோடு தவிர்க்கிறேன். இந்த கட்டுரையில் பன்மை விகுதியில் முடிந்திருந்தால் அது நானும் என் இரட்டை சகோதரனும் என்று அறிக. ஆனால் இந்த கட்டுரை எனை பற்றியது மட்டும் தான்.
புத்தகங்களின் பெரும் காதலன் நான். புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் நான் மண் மூடி போகையிலும் என் மனதில் இருப்பார்கள். நினைவு அடுக்குகளில் இருக்கும் அவர்களின் பெயர்களும் முகங்களும் நீந்தி நீந்தி மேலே வந்து எப்போதும் எனை முத்தமிட்டுச் செல்லும் ஒரு டால்ஃபினாக.
பொதுவாகவே, "அந்த நிகழ்வு அப்போது நிகழவில்லையென்றால் என் வாழ்வு எப்படி மாறியிருக்கும்", என எப்போதும் நான் நினைப்பதுண்டு, அப்படி நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சம் பதறும். அது போலவே இப்போது நினைத்துக் கொள்கிறேன், இங்கு சொல்லப்போகும் மனிதர்களையெல்லாம் நான் சந்திக்கவில்லையென்றால் நான் என்னவாக ஆகியிருப்பேனென்று.
அனைவரும் அனைத்து புத்தகங்களையும் படித்துவிட முடியாது , நிச்சயம் முடியாது. கடவுள் மறுப்பு கொள்கை பேசும் பெரும்பாலானோரால் ஆன்மீக புத்தகங்களை படிக்க முடியாது, அத்தமிழை ரசிக்க மனம் வராது. பக்தியுடையவர்கள் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் புத்தகங்களை நேசிக்க முடியாது. மனத்தடைகளை தூரமாக வீசி எறிந்தால் தான் பார்வை தெரியும், வழி பிறக்கும், அறிவுக் கடவுளை அடைய முடியும்.
யாரொருவரும் எடுத்தவுடன் நடப்பதில்லை, உருண்டு, தவழ்ந்து, நிற்க முயற்சித்து, பின் தத்தி நடந்து, பின் ஓட ஆரம்பிப்பது போலவே நானும் சிறு வயதில் காவியங்களை படிக்கவில்லை, காமிக்சிலேயே என் வாசிப்பை ஆரம்பித்தேன். என் அக்கா, என் பெரியப்பா மகள், பெயர் கவிதா, என் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். இன்றும் என் அகத்திற்கு பெரும் ஊக்கமளிப்பவர் அவர் (inspiration). நான் நான்காவதோ ஐந்தாவதோ (1994 or 1995) படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் அக்கா முகமூடி வீரர் மாயாவி புத்தகத்தை எடுத்து எங்களுக்கு எழுத்து கூட்டி படித்து காண்பித்தார், சிறு வயதில் எல்லா குழந்தைகளுக்கும் மாயாஜால கனவுகள் இருக்கும் , கனவு காணக் கூடத் தெரியாத வயதில் எனக்கும் என் இரட்டை சகோதரனுக்கும் அந்த மாயாஜால கனவுகளை சொல்லி கொடுத்தவர் அவர், வேறு உலகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றவர். என் கவிதா அக்கா , எனக்கு கதை புத்தகங்களை படித்து காண்பித்த அந்த சிறு செயலே புத்தகங்களின் மீது எனக்கு பெரும் காதல் உண்டாக விதையாக அமைந்தது. பின்னர் அவர் சிறுக சிறுக சேமித்து வைத்த சினிமா பாட்டு புத்தகங்களை எனக்கு சிறு வயதில் பரிசளித்தார். அதுவே நான் கவிதை எழுதுவதற்கும் , பாடல்கள் எழுதுவதற்கும் பெரும் காரணம். சினிமா பாடல்களின் சந்தங்கள், குறில், நெடில், ஒற்றுஎழுத்துகளின் நுட்பங்கள் என என் அக்கா கொடுத்த அந்த சினிமா பாட்டு புத்தகங்களின் வழியே தான் நானே கற்றுக் கொண்டேன்.
அப்போது தான் பாடலாசிரியர்களை கவனிக்க தொடங்கினேன், வாலி வைரமுத்து, பொன்னடியான், பிறைசூடன், பழனிபாரதி என இன்னும் நிறைய பாடலாசிரியர்களுடன் எழுத்தின் வழியே நெருக்கமானேன்.
ஏழாவது படிக்கும் போது முதல் பாடலை மெட்டுக்கு எழுதினேன் , என் நண்பன் ஒருவன் கடையில் BOOMER chewing gum ஐ திருடி மாட்டிக் கொண்டான் , அவனை கேலி செய்யும் விதமாக அப்போது மிக பிரபலமாக இருந்த "சலக்கு சலக்கு சரிகச் சேலை சலக்கு சலக்கு" பாடல் மெட்டுக்கு ஒரு பாடல் எழுதினேன். அந்த நண்பன், நான் எழுதிய பாடலின் காகிதத்தை தமிழாசிரியரான என் அம்மாவிடம் சென்று கொடுத்து விட, என் அம்மாவோ, "இரு அப்பாவிடம் சொல்கிறேன்", என சொல்லி அவர் handbag இல் என் பாடலை வைக்க , வீட்டிற்கு சென்றால் அடி கிடைக்கும் என பயந்து போனேன். ஆசிரியர் பசங்க என்பதால் staffroom க்குள் செல்லும் சிறப்பு அனுமதி இருந்தது , அதை பயன்படுத்தி என் அம்மாவின் handbag க்குள் இருக்கும் அந்த பாடலை எடுத்து கிழித்து போட்டு விட்டேன். பின்னாட்களில் என் அம்மாவே எனக்கு சினிமா பாட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்திருக்கிறார்.
Boomer திருடி மாட்டிய அந்த நண்பன் பிற்காலத்தில் எங்கள் கோயம்புத்தூரை விட்டு அவன் ஊரான மதுரைக்கே சென்றான். போகையில் எனக்கு அவன் நினைவாக உலகிற்கே அன்பை போதித்த இயேசுவின் "புதிய ஏற்பாடு" ஒன்றை தந்துவிட்டு போனான். இன்றும் அதை தொடுகையில் அவன் நினைவுகள் உள்ளத்தை தொடும். அவனை கிண்டலடித்து பாடிய எனக்கு இயேசுவின் வழி வந்த அவன் மன்னிப்பை தந்துவிட்டு போனான். இயேசுவின் காலடியில் ஊருக்கே மன்னிப்பை வழங்கும் திருச்சபையின் அருட்தந்தையாகிவிட்டான் என கேள்விப்பட்டேன். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது.
சூலூரில் 2002 ஆம் ஆண்டு பள்ளி முடிந்து ஆசிரியரான என் அம்மா வீடு திரும்புகையில் ஒரு பெண் தன் குழந்தையை மிகவும் அடித்துக்கொண்டிருக்க அந்த குழந்தை கதறி அழுது கொண்டுருப்பதை பார்த்த என் அம்மா என்னவென்று விசாரித்திருக்கிறார் , அதற்கு அந்த குழந்தையின் அம்மா, "எனக்கு தெரியாமல், கடைக்கு சென்று சினிமா பாட்டு புத்தகம் வாங்கி இருக்கிறான்" என சொல்ல என் அம்மா அவரை சமாதானப்படுத்தி அடிக்க வேண்டாம் என வீட்டிற்கு வந்து இந்த நிகழ்வை சொன்னார். எங்கள் வீட்டில் இது நேர்மாறான சூழ்நிலை. படிப்பை ஊக்குவிக்கும் பெற்றோர்.
1995, நான் ஐந்தாம் படிக்கையில் ஏதோ ஒரு புத்தக நிலையம் வந்து எங்கள் பள்ளியில் புத்தகங்களை விற்றார்கள், அப்போது தமிழாசிரியரான என் அம்மா விவேகானந்தரின் அறிவுரைகள், இன்னும் சில ஆன்மீக புத்தகங்கள் வாங்கினார், அப்போது என்னிடம் உனக்கு என்ன புத்தகம் வேண்டும் என கேட்ட போது "கரப்பான் பூதம்" எனும் குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகத்தை எடுத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.
என் அப்பா 40 வருடங்களுக்கும் மேல் CPI கட்சியில் உறுப்பினர். பொதுவுடைமை சிந்தனைகளை பரப்பும் நிறைய இடதுசாரி இதழ்கள் என் சிறு வயதில் இருந்தே வீட்டிற்கு வரும். 1994 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையின் பாடல்களின் தொகுப்பு எங்கள் வீட்டில் இருந்தது, அதை படித்து சத்தமாக பாடிக் கொண்டிருப்போம். புத்தகங்களினூடே தான் வளர்ந்தேன், ஒரு புத்தகப் பிரியன் ஆனதற்கு வளர்ந்த சூழ்நிலை முதன்மை காரணம்.
1997, ஏழாம் வகுப்பு படிக்கையில், தூர்தர்ஷனில் வெளியான காத்தாடி ராமமூர்த்தி நடித்த ஓய்வு என்றொரு நாடகம்., அதன் பாதிப்பில் என் முதல் கவிதை "ஓய்வு" எனும் தலைப்பில் எழுதி 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க' மாநாட்டில் அந்த கவிதையை படித்தேன், என் இரட்டைச் சகோதரன் அவனும் ஒரு கவிதையை படிக்க வளரும் இளம் தளிர் மாணவர்களான எங்களை ஊக்கப்படுத்த எங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தினார்கள்.
சொல்லும் வேகத்தில் நான் ஏழாம் வகுப்பிற்கு தாவி விட்டேன், அதற்கு முன்பு சில நிகழ்வுகளை கூற வேண்டும் என் கவிதா அக்கா முகமூடி வீரர் மாயாவியை அறிமுகப்படுத்தியவுடன் நான் அந்த மண்டை ஓட்டுக் குகையில் காணாமல் போனேன். முகமூடி வீரர் மாயாவியின் அந்த மண்டை ஓட்டு மோதிரத்தையும், இரண்டு குறுக்கு வாள் மோதிரத்தையும் எங்கெல்லாமோ தேடி அலைந்தேன். அந்த கதையில் வரும் ரெக்ஸ் என்கிற பெயர் மிகவும் பிடித்து போக எனக்கு நானே சிறு வயதில் ரெக்ஸ் என பெயர் வைத்துக் கொண்டேன், நான்காவது படிக்கும் போது டைரியில் நானும் என் இரட்டை சகோதரன் சுகதேவும் ஆங்கிலத்தில் மாயாஜால கதைகள் எழுதினோம், அதில் ஒரு கதைக்கு நான் வைத்த பெயர் முகமூடி வீரர் மாயாவி கதையில் வரும் சின்ன பையனின் பெயரான ரெக்ஸ் .
1994 - எங்களுக்கும் முகமூடி வீரர் மாயாவி புத்தகம் படிக்க வேண்டும் என்று என் அப்பாவிடம் கேட்க எங்களை தவமாய் தவமிருந்து படத்தில் வருவது போல சைக்கிளில் வைத்து, சாய்பாபா காலனி அழைத்துச் சென்று குமார் ஸ்டோர்ஸ்க்கு எதிரில் உள்ள ராஜா பழைய புத்தக கடைக்கு சென்று ஒவ்வொரு வாரமும் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி கொடுப்பார். ஆங்கிலத்திலும் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி கொடுப்பார் அதை தொட்டு கூட பார்க்க மாட்டோம்.
குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்ட அக்குழந்தைகளின்
தாய்மொழியிலிருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வாசித்து காண்பித்தால் அவர்கள் புத்தக வாசிப்பாளர்களாவார்கள் என்று பிற்காலத்தில் அகத்தாய்வின் மூலம் என் வாழ்விலிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
தாய்மொழியிலிருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வாசித்து காண்பித்தால் அவர்கள் புத்தக வாசிப்பாளர்களாவார்கள் என்று பிற்காலத்தில் அகத்தாய்வின் மூலம் என் வாழ்விலிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
குழந்தைகள் கதை கேட்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால், அவர்களிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் தானாகவே வளரும். குழந்தைகள் கதை கேட்பது தான் வாசிப்பின் முதல் படி, எனக்கு என் வாழ்வில் நிறைய கதைகள் சொன்னது என் உமா சித்தி. அக்பர் பீர்பால் கதைகள், தெனாலி ராமன் கதைகள், நிறைய விலங்குகள் கதைகள், ஒழுக்க நெறிகளை கதைகளின் மூலம் எங்களுக்கு ஊட்டினார். எல்லா குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டி வீடு என்றால் மகிழ்ச்சி , காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை என்றால் தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்வோம், உமா சித்தி எங்களுக்கு நிறைய கதைகள் சொல்வார். அந்த கதைகளினூடே நான் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். இன்று என் கற்பனைகளின் ஊற்றுகளுக்கு நான் பால்ய வயதில் கேட்ட மற்றும் படித்த கதைகளே காரணம்.
நான் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கையில் (1992 or 1993) பக்கத்து வீட்டு மாட்டு டாக்டரின் மகள் சுஜி அக்கா எனக்கு காமிக்ஸ் வடிவில் பைபிள் கதைகளை படித்து காண்பித்தார். எந்த பிரதிபலனும் பாராமல் பொறுமையாக கதைகளை வாசித்து காண்பித்த இந்த அக்காக்களே என் முதல் ஆசிரியர்கள். May 21, 1991 LTTEயால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள், அந்த நாள் கோவையில் நல்ல மழை, மழை பெய்து வெள்ளம் போல தண்ணீர் சென்றிருந்ததால், நிறைய மணல் வீட்டுமுன் தேங்கியிருந்தது, அடுத்த நாள், அதை என் அப்பா மண்வெட்டி கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார், அப்போது எதிர் வீட்டு மாட்டு டாக்டர் ஓடி வந்து, 'ராஜீவ் காந்தியை கொன்னுட்டாங்களாம், இப்போது தான் ரேடியோவில் சொன்னார்கள்' என்று சொன்னது இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. விடுதலைப் புலிகளை பற்றின புத்தகங்களையோ, செய்திகளையோ படிக்கும் போதெல்லாம் அந்த நாள் என் நினைவில் வந்து செல்லும்.
1991 - 1995: இன்று பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி, கட்டுரைகள், கவிதைகள், பாட்டு எழுதும் நான் வளர்ந்ததோ பார்ப்பனர்கள் வீடுகள் அருகினில் தான்.
நாங்கள் விளையாடுவதே பார்ப்பனர்கள் வீட்டினுள் தான். எந்த வேறுபாட்டையும் நான் சந்தித்ததில்லை. வெளியே போ என்று ஒரு போதும் அவர்கள் சொன்னதில்லை.
ஆன்மீக ஈடுபாடுடைய என் அம்மாவோ எங்களை அவரைப் போல வளர்க்க ஆசைப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பாலவிஹார் வகுப்பிற்கு அனுப்புவார். வீட்டிற்கு அருகிலிருக்கும் ஏதோ ஒரு பார்ப்பனர் வீட்டில் பாலவிஹார் வகுப்புகள் நடக்கும். சுவேதா அக்கா, பீரீத்தா அக்கா, சந்தோஷ், வெங்கடாசலம், ஸ்ரீநாத், கார்த்திக் அனைவரும் வருவார்கள், அவர்கள் அனைவருமே பார்ப்பன வீட்டு குழந்தைகள். கடவுள் கதைகள், பெருந்தெய்வ பாட்டுகள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், என கற்றுத் தருவார்கள். சாப்பிட ஏதாவது தருவார்கள்.
குழந்தைகளை கதைகள் சொல்ல அழைப்பார்கள். பல சிறுவர்கள் முன் கதைகள் சொல்வோம். பார்ப்பன சிறுவர்களுடன் தான் நாங்கள் விளையாடுவோம். கோவிலுக்கு செல்ல மறுக்கும் இன்றைய நான், சிறு வயதில் P&T (post அண்ட் telegraph) காலனியில் இருக்கும் கோவிலுக்குள் தான் விளையாடிக் கொண்டிருப்பேன் .
அந்த பார்ப்பன வீட்டு மாமிகள் எங்கள் பள்ளிக்கு வந்து பகவத் கீதை ஸ்லோகங்கள் கற்றுத் தருவார்கள். என் அம்மாவின் ஆசைப்படி வருடந்தோறும் பகவத் கீதையை மனனம் செய்து ஒப்புவிக்கும் "பகவத் கீதா" போட்டியில் பங்கேற்போம். "அயிருங்க மாதிரி எப்படி என் குழந்தைங்க மந்திரம் சொல்லுதுங்க", என என் அம்மா பெருமைப்பட்டு கொள்வார். அதே மந்திரங்களை நாம் கோவில் கருவறைக்குள் சென்று சொல்ல முடியாதெனும் உண்மையையும், நம் வீட்டு திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் வேறு, அவாள் வீட்டு திருமணத்தில் சொல்லப்படும் திருமண மந்திரங்கள் வேறென்பதையெல்லாம் 21 வயதிற்கு பின்னரே தெரிந்துக் கொண்டேன். வடவள்ளி அருகில் உள்ள சின்மயா பள்ளியில் தான் பகவத் கீதா போட்டி நடக்கும். பள்ளி படிக்கையில் வருடம்தோறும் சென்று கலந்து கொள்வேன்.
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய "கீதையின் மறுபக்கம்" புத்தகத்தை பின்னாட்களில் படிப்பேனென்று பள்ளி படிக்கும் போது அறிந்திருக்கவில்லை.
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய "கீதையின் மறுபக்கம்" புத்தகத்தை பின்னாட்களில் படிப்பேனென்று பள்ளி படிக்கும் போது அறிந்திருக்கவில்லை.
பகவத் கீதா போட்டியில் பல சான்றிதழ்கள் வாங்கியுள்ளேன். பரிசாக நிறைய கடவுள் கிருஷ்ணர் புத்தகங்கள் வாங்கியுள்ளேன். நல்லவேளை அதையெல்லாம் படிக்கும் ஆர்வம் சிறுவயதில் இருந்தே வந்ததில்லை. ஆனால் மந்திர தந்திரங்கள் நிறைந்த "ஸ்ரீ கிருஷ்ணா" நாடகத்தை ஞாயிறுதோறும் பார்ப்பேன். சனிக்கிழமை, இயேசுவின் "கருணா மூர்த்தி"யை பார்த்திருக்கிறேன்.
சிறு வயதில் சுஜி அக்கா சொன்ன இயேசு கதைகள், பால்ய வயதில் பார்த்த இயேசுவின் கருணா மூர்த்தி நெடுந்தொடர், இறை ஊழியம் செய்யும் ஒருவர் பேருந்தில் கொடுத்த இயேசுவை பற்றின ஒரு சிறு புத்தகம், நெடுங்காலம் எனக்கு குற்ற உணர்ச்சியை தூண்டிய "நமக்காக தான் இயேசு இறந்தார்" என இன்னொரு இறைஊழியம் செய்யும் ஒருவர் சொன்ன வாக்கியம், கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்த எனக்கு புதிய ஏற்பாடு அனைத்துமே பேரழகு கவிதைகளாக தெரிந்தது.
பின்னாட்களில், சேவியர் எழுதிய "இயேசு என்றொரு மனிதர் இருந்தார் ", "கிறிஸ்தவ வரலாறு", "புதிய ஏற்பாடு" படித்ததற்கு மேற்சொன்ன நிகழ்வுகள் அனைத்துமே காரணங்களாக இருக்கலாம் என அகத்தாய்வின் மூலம் தெரிந்து கொண்டேன். பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதங்கள் இன்னும் கவித்துவமாக இருக்கும் என சகோதரி ஒருவர் சொல்ல அதையும் படித்திருக்கிறேன்.
மொத்தம் மூன்று வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறோம்.
1990 - 1995 வரைக்கும் P&T காலனியில் ஐந்து அறைகள் கொண்ட சுற்று சுவருக்கு பதில் சுற்றியும் வேலிக் கொண்ட தனி வீடு , நாலு தெரு தள்ளி 1996 - 1997 மூன்று அறைகள் கொண்ட சுற்று சுவருடன் அழகான தனி வீடு . மூன்று வீடுகள் தள்ளி 1998 - 2001 சுற்று சுவருடன் ஒரு வீட்டின் பகுதியில் ஒரு வீடு. 2002 இல் இருந்து (1989இல் எங்கள் அப்பா கட்டிய) சொந்த வீடு
1993 - 1999 - வெள்ளிக்கிழமைதோறும், அந்த சந்திரன் அண்ணா கொண்டு வரும் சிறுவர் மலரை வாங்க எனக்கும் என் இரட்டைச் சகோதரனுக்கும் நடக்கும் போட்டியில் பெரும்பாலும் நானே வெற்றி பெறுவேன். அப்போதெல்லாம் நான் படித்த இலக்கியம் சிறுவர் மலர் தான் . யார் முதலில் படிப்பது என என் இரட்டை சகோதரனுடன் போட்டி வரும். அதில் வந்த மந்திர தந்திர கதைகள், பல முக மன்னன் ஜோ காமிக்ஸ் கதைகள், அறநெறி கதைகளில் நேரங்களை செலவிடுவேன். ஒரு சமயம் gateஐ பூட்டி விட்டு எகிறி குதித்து சிறுவர் மலர் வாங்கியது பசுமையாக நினைவில் இருக்கிறது.
1990 - 1998: எங்கள் வீட்டிற்கு பேப்பர் போடும் 'சந்திரன்' அண்ணா பார்க்க அஜீத் மாதிரி அவ்ளோ அழகாக இருப்பார். அவரின் வீடு P&T காலனிக்கு தள்ளியிருக்கும் சேரியில் தான் இருந்தது. அப்போதெல்லாம் எனக்கு ஊருக்கும் சேரிக்குமான வேறுபாடு தெரியாது. எப்போதும் என் அப்பா அந்த அண்ணாவை 'சந்திரன்' என்று தான் அழைப்பார். இப்போது (2023) சூலூரில் தூய்மை பணியாளரை எங்கள் அம்மா 'கௌரி' என்று பெயர் சொல்லி தான் அழைப்பார்கள். சமீபத்தில் தூய்மை பணியாளர்கள் பற்றின "தமிழா தமிழா" நிகழ்ச்சியை பார்த்த போது, அதில் வந்த பொது மக்கள் நிறைய பேருக்கு தங்கள் வீட்டிற்கு வரும் தூய்மை பணியாளர்களின் பெயர் தெரியாது என்று சொன்ன போது நான் என் பால்ய நாட்களை நினைத்துக் கொண்டேன்.
1997, 1998 எட்டாம் வகுப்பு படிக்கையில் காதல் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். UKG யில் இருந்து ஒன்றாக படித்த என் மீது அன்புகொண்டவளொருத்தி பத்தாவது படிக்கையில் என் கவிதை நோட்டை வாங்கி என் அனைத்து காதல் கவிதைகளையும் அதில் எழுதிக் கொடுத்தாள், படிக்க புத்தகங்கள் கொடுத்தாள். யாரும் நம்ப முடியா செய்தி என்னவெனில் 33 வருடங்களாக இன்றும் என் உடன் இருக்கிறாள். நான் சுந்தரத் தமிழில் கவிதைகள் எழுத அவளே முழு முதற் காரணம். அவளுக்கு ஏதோ போட்டியில் பரிசாக கிடைத்த பாரதியார் கவிதை புத்தகத்தையும், அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தையும் என் பிறந்தநாளுக்கு பரிசளித்தாள். "இறைவா, மதங்கள் மக்களை பிரிவு படுத்தாமல் மக்களை இணைக்க மதத்தலைவர்களுக்கு நல்லருள் புரிவாயாக", என்னும் அப்துல் கலாமின் வரியை புகழ்ந்து பேசினாள்.
பதினொன்றாம் வகுப்பு (2001) தொடக்கத்திலேயே 200 கவிதைகள் எழுதிவிட்டேன். அனைத்துமே காதல் கவிதைகள் தான் .11th standard இல் மினி மிஸ்ஸின் வகுப்பில் என் சொந்த பாடலை அப்பவே யோசித்து அப்பவே பாடினேன், எல்லோரும் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பாடி கொண்டே இருக்க , எதையாவது பார்த்து பாடுகிறாயா என மினி மிஸ் கேட்க கையை விரித்து இல்லை என்று தலையிட்டுவிட்டு தொடர்ந்து பாடினேன், ரொம்ப talent தான் என்றார்கள். வரிகள் நினைவில்லை.
அதே பதினொன்றாம் வகுப்பில் (2001) குண்டாக இருந்த என் இயற்பியல் ஆசிரியருக்கு பலூன் என பெயர் வைத்தேன், பிற்காலத்தில் நானே ஒரு இயற்பியல் ஆசிரியர் ஆவேன் என அப்போதெனக்கு தெரியாது. Free periodன் போது அந்த ஆசிரியரின் முகத்தின் முன் wonder பலூன், gundu பலூன் என சொந்தமாக கற்பனையோடு என் சொந்த பாடலை எந்த குறிப்பும் இல்லமால் யோசித்து நான் பாட பாட வகுப்பே உற்சாகமானது . அந்த ஆசிரியருக்கு மிக நன்றாக நான் அவரைத் தான் கிண்டல் அடிக்கிறேன் எனத் தெரிந்திருந்தும் சிரித்துக் கொண்டு விட்டு விட்டார். அப்போதெல்லாம் எனக்கு என்னை பற்றி தெரியாதது மெட்டுக்கு பாடல் எழுதும் ஆற்றல் எனக்கு இருக்கிறதென்பது .
அதே பதினொன்றாம் வகுப்பின் போது (2001) எங்கள் பள்ளி அருகில் இருக்கும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நிறைய போட்டிகள் நடப்பது தெரிந்து பள்ளி அனுமதியுடன் கலந்து கொண்டோம். அப்போது எங்கள் குடும்ப நண்பரின் மகன் ஒருவர் அந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் . கல்லூரி மாணவரான அவரை பார்த்து பேசிய போது அவரின் தோழிகளை அறிமுகம் செய்து வைத்தார், அவரின் நண்பர்கள் இவர் தான் உங்கள் அண்ணி என்று சொல்ல அனைவருக்கும் வெட்கம், மகிழ்ச்சி... அந்த பெண்ணின் புனைப் பெயர் ஜீவரோஜா. என் கவிதை நோட்டை அவர்களுக்கு கொடுக்க அதை முழுவதும் படித்த கொங்குநாட்டு கல்லூரி அக்காக்கள் என் கவிதை நோட்டு முழுக்க பென்சிலால் ஒவ்வொரு கவிதைக்கும் தங்கள் வயதிற்கே உரித்தான அன்பு கலந்த எள்ளலுடன் தங்களது கருத்துகளை எழுதி வைத்திருந்தனர். மேலும் கடைசி பக்கத்தில் இரண்டு பேர் முழு பக்கத்திற்கு மதிப்புரை வழங்கி இருந்தனர்., இது எதுவும் நான் எதிர்பாராதது., மேலும் கவிதைகள் எழுத என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.
ஒரு தொடர்ச்சியில் நாம் 2001 க்கு சென்றுவிட்டோம், மீண்டும் காலத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 1990 முதல் 1998 வரை அங்கப்பா CBSE (P&T colony) பள்ளியில் படித்தேன். 1999 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பிற்கு வேறொரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்ந்து படித்தேன். 1999, ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் புதிய பள்ளியில் எனக்கு கிடைத்த நட்பொன்று இன்று வரை தொடர்கிறது. அவன் பெயர் ரகுபதி ராஜா.
பள்ளிக்கு புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ள நடக்கும் போட்டியில் அவனும் பங்கேற்றான். எங்களிடம் அவன் எல்லாவற்றிற்கும் உதவுவதாக சொன்னான். ஏனோ காரணமில்லாமல் அவனை பிடித்து போனது . ஷேக்ஸ்பியர் சொன்னது போல காரணம் இல்லையென்றால் தான் அது உண்மையான காதல்/அன்பு என்பதை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
மிகச்சிறந்த கவிதைகள் எழுதும் ஆற்றல் அப்போதே அவனிடம் இருந்தது. நானும் கவிதைகள் எழுதுவேன் என்றவுடன் அப்போ நான் ஒரு தலைப்பு சொல்கிறேன் இப்போ கவிதை சொல்கிறாயா என்றான். அந்த 14 வயதில் நான் கொஞ்சம் மிரண்டு போய், இல்லை என்னால் அப்படி சொல்ல முடியாது, எனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என்றேன், சரி என்று அன்புடன் விட்டு விட்டான்.
எப்போதும் எனை ஆச்சரியமூட்டுபவனாகவே இன்று வரை இருந்து வருகிறான். அவன் பெற்றோர் ஒரு உணவகம் நடத்தி வந்தனர். அவன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன். அவர்கள் பேசும் தமிழே எனக்கு புதிது. பலமுறை பள்ளி முடிந்து, பள்ளி அருகில் இருக்கும் அவன் வீட்டிற்கு செல்வோம். அப்படி செல்கையில் அவன் வீட்டில் நிறைய வைரமுத்து புத்தகங்களை பார்த்தேன். எனக்கு அந்த புத்தகங்களை எனக்கு படிக்க கொடுத்தான். ஏற்கனவே கவிதையிலும் புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வம் இருந்ததால் இயல்பாக அந்த புத்தகங்களை படிக்க தொடங்கினேன். வைரமுத்துவின் எழுத்துக்கள் என்னை வேறு நடையில் சிந்திக்க தூண்டியது.
கவுண்டம்பாளையத்தில், ராமகிருஷ்ணா மடம் எங்கள் பள்ளியில் அருகில் இருந்தது, பள்ளி முடிந்ததும் ரகுபதியுடன் அங்கு சென்று சிறிது நேரம் உட்காருவோம். அம்மடத்தில் விண்வெளியில் உள்ள பேரமைதி இருக்கும். எங்கள் எதிர்காலம் பற்றி, மேற்படிப்பு பற்றி, பெண்கள் பற்றி, அரசியல் பற்றி, கவிதைகள் பற்றி என அனைத்தும் பேசுவோம். எப்போதும் மாற்று கோணத்தில் சிந்திப்பது அவனுக்கு இயல்பாய் இருக்கும். மந்தைகளில் இருந்து மாறுப்பட்டவனாய் இருந்ததாலும் , அப்போதிருந்தே நான் ஒரு sapiophile என்பதாலும் மிக எளிதில் என்னை அவன் வசீகரித்தான்.
2002இல் வீட்டை காலி செய்து சொந்த வீட்டிற்கு, சூலூர் சென்றோம். எல்லோரையும் பிரிந்தேன். வேறொரு வாழ்க்கை ஆரம்பமானது. சூலூர் அரசு நூலகத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். உறுப்பினரானேன். நிறைய புத்தகங்கள் அறிமுகமானது.,மற்றும் சூலூர் அறிவியல் பூங்கா என்னும் நூலகம் புதிதாக ஆரம்பித்தனர், முதல் உறுப்பினர் ஆனேன்.
பாவேந்தர் பேரவை என்ற ஒரு கட்டிடத்தை பார்த்தேன், எதிர் வீட்டில் இருக்கும் ஒரு தமிழாசிரியர் புலவர் அங்கு செல்வார் என்பதை அறிந்திருந்தேன், அங்கு சென்றேன். புலவர் செந்தலை ந.கவுதமன் Uncle இருந்தார். அவரை uncle uncle என அழைக்க, நீங்கள் பெயர் சொல்லி கூட அழையுங்கள், uncle என அழைக்க வேண்டாம் என்றார்., ஏன் சொல்கிறார் எதற்கு சொல்கிறார் என ஒன்றும் புரியவில்லை. எப்படி அழைப்பதென்றும் தெரியவில்லை. கையில் ஏதோ புத்தகம் வைத்திருந்தேன், என்ன புத்தகம் என்றார், சூலூர் அரசு நூலகம் சென்றேன், இந்த புத்தகத்தை எடுத்தேன் என்றேன், ஓ புத்தகம் படிப்பீர்களா என்றார்? ஆம் என்றேன்.
சூலூர் அரசு நூலகத்தில் உறுப்பினராகிவிட்டேன், சூலூர் அறிவியல் பூங்காவில் உறுப்பினராகிவிட்டேன், இங்கும் உறுப்பினராக வேண்டும், இங்கு உறுப்பினராக எத்தனை காசு கட்ட வேண்டும் என கேட்க அதற்கும் அனைவரும் சிரித்தனர். அதற்கு புலவர் அய்யா, காசு எல்லாம் கட்ட வேண்டாம், நீங்கள் வாங்க, வந்து புத்தகம் படியுங்க, வேண்டும் என்றால் புத்தகம் எடுத்துச் செல்லலாம் என்றார். எனக்கோ ஒரே மகிழ்ச்சி, இருபது ரூபாய் மிச்சம் என நினைத்துக் கொண்டேன்.
பின் ஏதோ நான் கேள்வி கேட்க, அதற்கு புலவர் அய்யா, "இப்ப நாம எல்லாம் சாமி கும்பிடுறோமில்ல", என சொல்ல, இல்லைங்க அய்யா நான் சாமி கும்பிட மாட்டேன் எனச் சொல்ல, ஓ அப்படியா நாங்க எல்லாரும் சாமி கும்பிடுவோம் என அய்யா சொல்ல அங்கு அனைவரும் சிரித்தனர், எனக்கு எதற்கு சிரிக்கிறார்கள் என்றே புரியவில்லை. பெரியார் படம் எல்லாம் மாட்டி இருப்பதால் நீங்கள் எல்லாரும் சாமி கும்பிட மாட்டீங்க என நினைத்தேனென்று சொல்ல அதற்கும் அனைவரும் சிரித்தனர்.
2002, நானோ 12ஆம் படித்து வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன், சின்ன பையன், இவர்களோ எல்லோரும் பெரியவர்கள், சில பேர் தோழர்கள் என்கிறார்கள், வாங்க போங்க என பேசுகிறார்கள், எனக்கு ஒரே வியப்பு. என் அப்பா பொதுவுடைமைவாதி என்பதால் நான் குழந்தையாக இருந்த போதிலிருந்து தோழர் எனும் வார்த்தையை கேட்டு தான் வளர்ந்தேன், ஆனால் முதல்முறை என்னை தோழர் என அழைத்ததை அங்கு தான் கேட்டேன். அந்த இனிய நாளில் ஆரம்பதித்தது பாவேந்தர் பேரவை உடனான நட்பு.
ஜூன் 8 2003 ஆம் ஆண்டு பாவேந்தர் பேரவைக்கு சற்று தள்ளி ஒரு சின்ன stationeryயுடன் ஒரு புதிய புத்தக கடை ஆரம்பித்திருக்க, விடுதலை புலிகள் பற்றின புத்தகத்தை வாங்கி விட்டு பாவேந்தர் பேரவை சென்றேன். அது என்ன புத்தகம் என அய்யா கேட்க, காண்பித்தேன், ஏன் இதை வாங்கினீர்கள் என்றார், அய்யா இன்று என் பிறந்த நாள், அதனால் வாங்கினேன் என்றேன்.
ஓ அப்படியா என கேட்டுவிட்டு, அய்யா பேசினார், கேட்டுக் கொண்டிருந்தேன், பின் அய்யா எழுந்து சென்று ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பின் நான் கிளம்பும் போது மாவோ புத்தகம் ஒன்றை அய்யா பரிசளித்தார், எப்போதும் புத்தகம் பரிசளிக்கும் முன் முதல் பக்கத்தில் வாழ்த்துகள் என்று எழுதி ஊக்கம் தரும் வாசகங்கள் எழுதி கையெழுத்திட்டு கொடுப்பார்.
என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் திருமண நாளுக்கும், ஏதாவது புத்தகம் பரிசளிப்பார்.
ஒரு பிறந்த நாளுக்கு பேரறிஞர் வே.ஆனைமுத்து அய்யாவின் "பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்" 20 - இருபது தொகுதிகள் மற்றும் சில புத்தகங்கள் கொடுத்தார். மறக்க முடியாத மிகப்பெரிய பரிசு அது.
ஒரு பிறந்த நாளுக்கு பேரறிஞர் வே.ஆனைமுத்து அய்யாவின் "பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்" 20 - இருபது தொகுதிகள் மற்றும் சில புத்தகங்கள் கொடுத்தார். மறக்க முடியாத மிகப்பெரிய பரிசு அது.
அரசியல் தொடர்பாக, இலக்கியம் தொடர்பாக, பொதுவான நான் கேட்ட எத்தனையோ கேள்விகளுக்கு அத்தனை பொறுமையாக பதில் சொல்லி எனக்கு அடிப்படை அரசியலை கற்றுத் தந்தவர் புலவர் செந்தலை ந.கவுதமன் அய்யா.
எப்பொழுதும் அவர் வீட்டிற்கு அவர் பேசுவதை கேட்க செல்வோம். அறிவின் ஊற்று அவர், அறிவுச் சுரங்கம் அவர். எத்தனையோ புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். ஏதாவது ஒரு துறையில் ஆழமான அறிவு இருக்க வேண்டும் என்பார். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திருக்குறள் சொல்வார், மிக ஆச்சிரியமாக இருக்கும், அட எல்லா சூழ்நிலைக்கும் இது பொருந்துகிறதே என நினைக்கச் செய்யும்படி செய்வார்.
புலவர் அய்யா, சிங்கப்பூர் மலேசியா செல்கையில் ச.தமிழ்ச்செல்வனுடைய இரண்டு புத்தகங்கள் கொடுத்து விட்டு அதை திரும்ப வருவதற்குள் படித்து வைத்திருக்க சொன்னார். படித்திருந்தேன்.
புத்தகங்களை படிக்கையில் உடன்பாடானவை, முரண்பாடானவை, கூடுதல் விளக்கம் தேவை என குறிப்பெடுத்து படிக்க சொன்னார்.ஒவ்வொன்றுக்கும் ஒரு Symbol வைத்துக் கொள்ளுங்கள் என அய்யா அறிவுறுத்தினார். ஆவணப்படுத்த வேண்டியவை என இன்னொன்றை நான் சேர்த்துக் கொண்டேன்
எத்தனையோ நாட்கள் சூலூர் அரசு நூலகத்திலும், சூலூர் அறிவியல் பூங்காவிலும் கடைசி ஆளாக வெளியேறி இருக்கிறேன். அரசு நூலகத்தின் அந்த தூசியுடன் கூடிய பழைய புத்தகங்களின் வாசனையை நுகர்ந்துக் கொண்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன். எப்போதும் புத்தகங்களோடே வாழ அமைந்த ஒரு வாழ்க்கை, அதற்கு ஊதியம், கரும்பு தின்ன கூலி, நூலகர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், எவ்வளவு பாக்கியவான்கள் என எப்போதும் நினைத்துக் கொள்வேன்.
சூலூர் நூலகத்தில் தான் கவிஞர் பா.விஜய்யின் முதல் கவிதை புத்தகத்தை பார்த்தேன். பிரமிள் எனக்கு அறிமுகமானார், இன்னும் எத்தனையோ இலக்கியவாதிகளை தெரிந்துக் கொண்டேன். இசையமைப்பாளர் இளையராஜாவின் கவிதை புத்தகத்தை பார்த்து வியந்து போனேன், அதுவரை இளையராஜா ஒரு கவிஞர் என எனக்கு தெரியாது. மரபு கவிதையும், வெண்பாக்களும் படைக்கக் கூடிய அளவுக்கு இளையராஜாவிற்கு தமிழில் ஆற்றல் இருப்பது அப்போது தான் எனக்கு தெரியும். இரண்டு புலவர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் சண்டையிடாமல் இருக்க மாட்டார்கள் என்பது போல வைரமுத்துவிற்கும் இளையராஜாவிற்கும் வந்த சண்டை இரண்டு பேருக்கும் இருந்த ஆழமான தமிழ் ஆற்றலும் ஒரு காரணம் என நினைத்துக் கொண்டேன்.
என் 14 வயதிலிருந்தே வைரமுத்துவையே அதிகமாக நேசிக்கும் காரணத்தால், இளையராஜா வைரமுத்துவின் பாடல்களை அடித்து திருத்தியதை கேட்ட எனக்கே வலிக்கும் போது, வைரமுத்துவிற்கு எப்படி இருந்துருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
சூலூருக்கு தொண்டாற்றி மறைந்த சூ.ரா தங்கவேலு அய்யாவின் அயராத உழைப்பில் உருவான சூலூர் அறிவியில் பூங்காவில் தான் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் புத்தகத்தை படித்தேன், இன்னும் எத்தனையோ புத்தகங்கள். ஒரு மிகப் பெரும் அறையை வணிகத்திற்காக பயன்படுத்தாமல், சூலூர் மக்களுக்கு பயன்பட வேண்டும் எனும் ஒரு உயரிய நோக்கத்திற்காக சூ.ரா தங்கவேலு அய்யாவை, மன்னவன் அண்ணனை அவர்கள் குடும்பத்தை சூலூர் மக்கள் நன்றியோடு என்றும் நினைப்பார்கள். என்றென்றும் அவர்களின் பெயர் நீடித்து நிலைத்திருக்கும், புகழ் மங்காமல் வாழ்ந்திருக்கும்.
அந்த சூலூர் அறிவியல் பூங்காவில், திராவிடர் தமிழர் இயக்கத்து பேரவையைச் சேர்ந்த தோழர் சூலூர் தேவராஜ் அவர்கள், "படித்த புத்தகத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள செய்யும்" நிகழ்ச்சியை வாரம் தோறும் நடத்துவார். அதில் நான் கலந்துக் கொள்வேன், நான் பேசிய முதல் முதல் புத்தகம், புலவர் செந்தலை ந.கவுதமன் அய்யா எழுதிய "சூலூர் வரலாறு", அடுத்த வாரம் நான் பேசிய இரண்டாம் புத்தகம், சுப.வீ அய்யா எழுதிய மிகச் சிறந்த புத்தகமான "பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம்".
அந்த சூலூர் அறிவியல் பூங்காவில் தான், புலவர் ஆதி என்கிற ராசியண்ணன் அய்யா எழுதிய, "மார்க்சியத்தின் அடித்தளம் உழைப்பு-பண்டம்" புத்தக திறனாய்வு கூட்டம் நடந்தது. மதிற்பிற்குரிய தோழர் வள்ளுவராசன் அய்யா தான் திறனாய்வு செய்தார். அந்த கூட்டம் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. தோழர் வள்ளுவராசன் அய்யா பேசிக் கொண்டிருக்கும் போது, "ஒரு புத்தகத்தை இப்படி திறனாய்வு செய்ய கூடாது" என புலவர் ராசியண்ணன் அய்யா சொல்ல, "நான் புலவர் ராசியண்ணன் இல்லை, நான் வள்ளுவராசன், இப்படித் தான் செய்வேன் என வள்ளுவராசன் அய்யா சொன்னார்".
அந்தக் கூட்டத்தில் தான் புலவர் ராசியண்ணன் அய்யா மனிதன் என்ற வார்த்தை தமிழ் சொல் கிடையாது என சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது, பின்னர் கூட்டம் முடிந்ததும் அப்போது மனிதன் என்ற சொல்லலுக்கு இணையான சொல் என்னங்க அய்யா எனக் கேட்க மாந்தர் எனச் சொன்னார்.
அந்த சூலூர் அறிவியல் பூங்காவில் தான் சிவசண்முகம் அய்யாவை சந்தித்தேன், எப்போதும் நான் மாலையில் போகும் போது citizen படத்தில் வயதான வேடத்தில் வரும் அஜித் போல ஒருவர் ஏதாவது புத்தகத்தை படித்து குறிப்பெடுத்து ஒரு புத்தகத்தில் எழுதிக் கொண்டிருப்பார். நான் கொஞ்சம் introvert என்பதால் வலிய சென்று பேசவில்லை. பின்னர் நட்பானோம். அவரும் பெரியார் இயக்க தொடர்பில் இருந்தார். வீடு குடிமாறி செல்வபுரத்திற்கு சென்றார். அவர் எனக்கு ஒரு முறை அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். எனக்கு மிகவும் பிடித்த மனிதர். என் மேல் மிகவும் பாசமாக இருப்பார். அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகவும் வியப்பாகவும் உந்துதலாகவும் இருக்கும்.
பதினொன்றாம் வகுப்பில்
2002 April, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய பின் மேற்கொண்டு என்ன படிப்பது, எந்த கல்லூரியில் சேர வேண்டும் என முடிவெடுக்க முடியாத ஒரு நிலை. அப்போது பொறியியல் படிக்க நுழைவுத் தேர்வு இருந்தது (TANCET), அதற்கு தயார் செய்ய சூலூரிலிருந்து கவுண்டம்பாளையம் சென்று சூர்யா sir இடம் tuition சேர்ந்தோம். ஒரு மாதமோ, இரண்டு மாதமோ தினமும் சென்று வருவோம். அப்போது வயது 17. அப்போதும் அதற்கு முன்பும் பின்பும் நண்பன் ரகுபதி படிக்க கேட்கும் புத்தகங்களை நான் என் வீட்டிலிருந்தும் நூலகத்திலிருந்தும் எடுத்து தருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது அவன் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க கேட்க என் வீட்டிலிருந்து படிக்க கொடுத்திருந்தேன். அவன் அதை தனிவகுப்பிற்கு (tuition) எடுத்து வருவான். எப்படி இவ்வளவு பெரிய புத்தகத்தை படிக்கிறான் என எனக்கு வியப்பாக இருக்கும்.
அப்போது அவனிடம் ரகுபதி இந்த புத்தகத்தையெல்லாம் நான் படித்தால் எனக்கு புரியுமா என்று அவனிடம் கேட்ட போது, பேரன்பான ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சுபாஷ், இது ரொம்ப எளிமையான தமிழ் டா, நிச்சயம் உனக்கு புரியும் என்று சொல்லிவிட்டு, சில வரிகளை வாசித்து காண்பித்தான், பின் பார்த்தாயா, எவ்வளவு எளிமையாக இருக்கிறது, நீ கண்டிப்பாக இந்த புத்தகத்தை படி, உனக்கு மிகவும் பிடிக்கும்", என்று சொல்லி பொன்னியின் செல்வனின் கதையை அவன் படித்தவரைக்கும் சுருக்கமாக எளிமையாக சொன்னான். அன்று அவன், "இல்லை டா, உனக்கெல்லாம் இது புரியாது", என சொல்லியிருந்தால் நிச்சயம் அதை நான் நம்பியிருப்பேன், வாழ்வில் புத்தகமே படிக்காமல் கூட விட்டுருப்பேன்., அல்லது பெரிய புத்தகங்களையோ இலக்கியங்களையோ படிக்கும் ஆர்வமோ, தைரியமோ வந்திருக்காது. எனக்கு ஊக்கம் கொடுத்து என் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அவன் என் தெய்வம்.
2002, பனிரெண்டாம் படிக்கையில் சில காலம் பெரியப்பா பெரியம்மா - கவிதா அக்கா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்ற வந்த போது நிறைய ராஜேஷ் குமார் நாவல்கள் படித்தேன்.
2003, இளங்கலை சேர்ந்தேன். பாடங்களில் மனம் என்றும் ஒன்றாத போது, பேராசிரியர்கள் நடத்திக் கொண்டிருக்கையில் நானோ வேறு ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். பெரும்பாலும் அது கவிதை புத்தகமோ அல்லது கட்டுரை புத்தகமாகவோ இருக்கும். கதை புத்தகங்கள் படிப்பது நேர விரயமென்றும் அதனால் அறிவு வளப்படாது எனும் கருத்தை ஆழமாக வைத்திருந்தேன்.
2003, கல்லூரி படிக்கையில், சூலூர் அரசு நூலகத்திற்கும் , சூலூர் அறிவியல் பூங்கா நூலகத்திற்கும், பாவேந்தர் பேரவை சென்றும் புத்தகம் படித்த நானோ எங்கள் கல்லூரி நூலகத்திற்கு ஒரு முறை கூட சென்றதில்லை.
"கல்லூரியின் அந்த கடைசி நாள்" எனும் என் கவிதையில் நான் இப்படி எழுதியிருந்தேன்,
.......
"மூன்று வருடமும்
முறையாக
நாங்கள் பயன்படுத்தாத
அந்த நூலகத்தை
ஏக்கத்துடன்
பார்த்துக் கொள்வேன்"....................
இளங்கலை படிக்கையில் 2004 ஆம் ஆண்டு கவிதை எழுதும் ஐந்து நண்பர்கள் சேர்ந்து கவிதை புத்தகம் வெளியிட்டோம். அதற்கு இளையதளம் என்று நான் பெயரிட்டேன்.
சிறு வயதில் பெரிதும் வியந்த வைரமுத்து அவர்களை சந்திக்கும் வாய்பொன்று கிடைத்தது. எங்கள் கோவைக்கு 'விஜயா பதிப்பகத்திற்கு' அவர் வருகிறார் என தெரிந்து கொண்டேன். நிச்சயம் அவரை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அவரை சந்திக்கும் ஆசையில் இரவெல்லாம் அந்தச் சந்திப்பு எப்படி நிகழும், என்ன பேச வேண்டும் என பலமுறை மனதிற்குள் ஒத்திகை செய்து கொண்டேயிருந்து என்னை அறியாமல் உறங்கி போனேன்.
மறுநாள் அவரை சந்திக்க என் இரட்டை சகோதரனும், எங்கள் நண்பன் ராஜேஷும் விஜயா பதிப்பகம் சென்றோம். கவிப்பேரரசு அவர்கள் வரும் நேரத்திற்கு முன்னரே சென்றோம் . அவருக்காக காத்துக் கொண்டிருந்த நொடிகள் வாழ்வின் மிக நீண்ட நொடிகள். ரகசியமாக ஒரு காதலியை சந்திக்க காத்துக் கொண்டிருக்கும் ஒரு காதலனை போல நெஞ்சம் படபடத்து கொண்டிருந்தது. கடைசியாக அவர் சொல்லிய நேரத்திற்கு மிகச் சரியாக வந்தார். ஒரு சிங்கம் போல கம்பீரமாக வெள்ளை உடையில் வணக்கம் சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது அதிகபட்சம் இருபது பேரே அங்கிருந்தனர். என் ஆதர்ஷ கவிஞர், யார் எழுத்தை வாசித்து வாசித்து நான் ரசித்து சிரித்தேனோ, யார் எழுத்து எனக்கு பெரும் உந்துதலாக இருந்ததோ அவரை பார்த்த நொடி உலகத்தையே மறந்து போனேன். எனக்கு வேறு எதுவுமே தெரியவுமில்லை , கேட்கவுமில்லை. ஒவ்வொருவராக அவரை சந்தித்து விடைபெற்றனர். அவரின் புத்தகங்கள் வாங்கிய அவர்களுக்கு கையெழுத்திட்டு சில வார்த்தைகள் பேசினார். "பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க" குணா கமல்ஹாசனை போல நான் வரிசையில் 'இடம் வலம்' ஆடி ஆடி அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் புத்தகத்தை வாங்கி இருந்தேன் . எங்கள் முறை வந்ததும் என் இரட்டை சகோதரனை மட்டும் உள்ளே அனுப்ப நாங்கள் twins என்னையும் உள்ளே விடுங்கள் என சொல்லி உள்ளே சென்றேன். அவர் குனிந்து புத்தகங்களுக்கு கையெழுத்திட்டுக் கொண்டிருக்கையில் நாங்கள் twins என்று சொல்ல , மேலே நிமிர்ந்து பார்த்தார், சிரித்து மகிழ்ச்சி என்று சொன்னார், உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கேன் என்று கொடுத்தேன், வாங்கி கண்டிப்பாக பதில் எழுதுகிறேன் என்றார். என்ன படிக்கிறீர்கள் எனக் கேட்டார், சொன்னேன் , ஓ அதற்கு நல்ல future இருக்கிறது என்றார்; ஆங்கிலத்தில் அவர் பேசியதை முதல் முறையாக கேட்டேன்.
வீட்டிற்கு வந்த பின்னும் வியப்பிலிருந்து இன்னும் என்னால் வெளிவரமுடியவில்லை.